Upcoming Events

மகா சிவராத்திரி பயணம்

(08.03.2024 மாலை 6.00 மணி முதல் 09.03.2024 காலை 6மணி வரை)

1. திருநெடுங்குளம்
2. திருவெறும்பூர்
3. சோழமாதேவி
4. திருவாசி
5. உத்தமகோவில்
6. திருவானைக்கோவில்
7. நார்த்தாமலை சுனைலிங்கம்

புதுக்கோட்டை சமணர் தடயம்:

ஆற்றுப்படையின் அடுத்த நிகழ்வாய், புதுக்கோட்டையில் செழித்தோங்கிய சமண மதம் குறித்து அறிந்துகொள்ள வரும் பிப்ரவரி மாதம் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பயணிக்க உள்ளோம், நிகழ்வினை சமண மத பண்பாட்டியல் ஆய்வாளரான முனைவர்.மகாத்மா செல்வபாண்டியன் முன்னின்று நடத்த உள்ளோர். நிகழ்வில் கலந்துகொள்ள கீழுள்ள இணைப்பை பூர்த்தி செய்யவும்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மரபுநடை

புதுக்கோட்டை மாவட்டம் இன்று நாம் புதுக்கோட்டை என்றழைக்கும் தமிழகத்தின் பதினைந்தாவது மாவட்டமானது பெருங்கற்கால காலத்திலிருந்தே நெடிய வரலாற்றுத் தொடர்பை தன்னகத்தே கொண்டுள்ள நிலப்பரப்பாகும். செங்களூர், காளியாப்பட்டி, அன்ன வாசல், ஒலியமங்கலம், கலசக்காடு முதலிய இடங்களில் அந்நாளைய இறந்தோர் நினைவிடங்களான முதுமக்கள் தாழிகள் கிடைக்கின்றன. தொல்லியலாளர்கள் பொஆமு 800 முதல் பொஆ 100 வரை இங்கு பெருங்கற்கால நாகரிகம் தழைத்திருந்ததாக கருதுகின்றனர். சங்க கால ஊர்கள் பல இம்மாவட்டத்தைச் சேர்ந்ததென்று ஆய்வாளர்கள் உரைக்கின்றனர்.
பிராமிக்குத் தாயான தமிழிக் கல்வெட்டுகள் இங்கு சித்தன்ன வாசலிலும், குடுமியான்மலையிலும், பொற்பனைக்கோட்டை நடுகல்லிலும் கிடைக்கின்றன. கருக்காக்குறிச்சியில் 19ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பொன் நாணயங்கள், நாம் ரோம் நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததற்கு சான்றாக அமைகிறது. இருண்ட காலத்தின் சுடர் விளக்கான பூலாங்குறிச்சிக் கல்வெட்டும் இம்மாவட்டத்தினுடையது (பொன்னமராவதி பிரிக்கப்பட்டதால் இன்று இப்பகுதி சிவகங்கை மாவட்டம் சார்ந்தது).
வரலாற்றுத் தொடக்ககால சமண எச்சங்கள் அதிகம் நிறைந்த பகுதி. சோழ பாண்டிய நாடுகளின் எல்லைகளைத் தன்னகத்தே கொண்ட மாவட்டமிது. முத்தரையர்கள் மற்றும் வேளிர்களின் துணைக்கொண்டு பாண்டியர்களும் சோழர்களும் சில பகுதிகளை பல்லவர்களும் இங்கு ஆண்டிருக்கின்றனர். களப்பிரற்குப் பிறகான முற்கால பாண்டியப் பேரரசின் கல்வெட்டுகளும், பல்லவர்களின் கல்வெட்டுகளும் பொஆ 8ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கின்றன.பொஆ 9ஆம் நூற்றாண்டிலிருந்து பிற்காலச் சோழர்களின் கல்வெட்டுகளும், பொஆ 12ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பிற்காலப் பாண்டிய பேரரசின் கல்வெட்டுகளும் கிடைக்கின்றன.
பொஆ 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய அரசில் தொடர் குழப்பங்கள் ஏற்பட்டன. பொஆ 14 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் (பொஆ 1310-11) டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்காபூர் ஹொய்சாள நாட்டை வென்ற கையோடு மதுரை நோக்கி வந்தான். அதற்கு நாடாளும் ஆசையில் சுந்தர பாண்டியன் உதவி புரிந்ததாகக் கருதப்படுகிறது. மதுரையை நோக்கிச் சென்ற மாலிக்காபூரின் படையானது புதுக்கோட்டை பகுதியான நார்த்தாமலை, கொடும்பாளூர் வழியாகச் சென்றதாகவும் அப்போது அங்கிருந்த கோயில்கள் சேதப்படுத்தப் பட்டதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். செல்வத்தின் பொருட்டு நடந்த இப்படையெடுப்பிற்குப் பிறகு சிறிது காலம் மட்டுமே பாண்டியர் ஆட்சி தமிழகத்திலே நிலவியதாகத் தெரிகிறது.
பொஆ 14 ம் நூற்றாண்டின் இடைப்பகுதிகளில் மதுரையை ஆண்ட சுல்தான்களை வீழ்த்தி, தமிழகத்தை விஜயநகரப் பேரரசு ஆட்சி செய்யத் துவங்கியது. புதுக்கோட்டையில் விஜய நகரப் பேரரசின் கல்வெட்டுகள் பொஆ 14ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து கிடைக்கின்றன. தமிழகத்தில் பொஆ 16 ஆம் நூற்றாண்டில் இருந்து நாயக்கர்களின் கீழ் ஆட்சியிருந்த போது புதுக்கோட்டையின் தென்பகுதி மதுரை நாயக்கர்களின் கீழும், கிழக்குப் பகுதி தஞ்சை நாயக்கர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது. பின்னர் பொஆ 1640ல் துவங்கிய தொண்டைமான்களின் புதுக்கோட்டை சமஸ்தான ஆட்சி பொஆ 1948ல் முடிவுற்று ஓர் இந்தியா உருவானது. நமது மரபுநடையில் இத்தகைய சிறப்புடைய புதுக்கோட்டையின் மரபுசின்னங்களை கண்டோம்.

செங்கம் நடுகற்கள்

செங்கம் நடுகற்கள் ஓர் பயணம்

நடுகல் :

வாழ்வியல்! முடியுடைய வேந்தர் மூவரும், வேளிரும் தமக்குள் மேலாண்மை, அதிகாரம் நிலைகொள்ள போரிட்டு கொண்டனர், குடிமக்களும் தம்முள், அக்காலத்திய பெருஞ்செல்வமான மாடுகளை கவரும் பொருட்டு மாண்டுள்ளனர், இவற்றை சங்க இலக்கியங்கள் “தொரு பூசல்”, “ஆநிரை கவர்தல்” என கூறுகின்றன. இவர்கள் மட்டுமில்லாது குறிஞ்சி நில மாந்தர்கள் வேட்டையாடும்போதோ, அல்லது ஊரை அச்சுறுத்திய பன்றி, புலி, போன்ற விலங்கினத்திலிருந்து மக்களை காப்பாற்ற சமர் புரிந்துள்ளனர். இவ்வாறு நிகழ்ந்த சமரில் இறந்து போன வீரர்கள் நினைவாய் மக்கள் போற்றி வந்துள்ளனர். போரில் மரணம் ஏற்படும் நிகழ்வு போர்களத்தில் வழக்கமான ஒன்று, அப்போர்தனில் பெருவீரம் காட்டியோர், மக்களை காப்பாற்ற விலங்கீனங்களோடு போராடி தன்னுயிரை இழந்தோரை மக்கள், இறந்த இடத்தில் கல்லெழுப்பி வணங்கும் வழக்கம் இருந்துள்ளது. இதனை நடுகற்கள் அல்லது வீரக்கற்கள் என அழைக்கப்படுகிது. ஆங்கிலத்தில் இவ்வகை கற்களை Herostones என்பர்.
ஆரம்பகட்டத்தில் இறந்தவர் நினைவாய் ஒரு பெரும் கல்லெழுப்பி வணங்கீயதும், பின்னர் கி.மு 4 ம் நூற்றாண்டு அளவில் அக்கற்களில் இறந்தவரின் பெயரையும், ஊரினையும் இறந்த காரணத்தினையும் கல்லில் பொறித்துள்ளனர். புலிமான் கோம்பை, தாதபுரம், பொற்பனைக்கோட்டை நடுகற்கள் இந்நிகழ்வை எடுத்துக்காட்டுகிது. அதற்கடுத்ததாய் இறந்தவரின் உருவத்தினை ஒரு கோட்டுருவமாய் வரைந்துள்ளனர். இவ்வகை உருவங்கள் கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் கிடைக்கிறது! இன்னும் சில காலம் கழித்து இறந்தவரின் உருவத்தினையும், அர் காட்டிய வீரத்தினையும் சிற்பமாய் வடிக்கும் வழக்கம் வருகிறது! பல்லவர் காலம் தொட்டு நாயக்கர் காலம் வரை இவ்வகை நடுகல் நிறைய கிடைக்கிறது! இக்கற்களின் மன்னரின் பெயர், அரசு, ஆட்சியாண்டு, இறந்தவரின் விவரம், உருவம், இறப்பிற்கு காரணம் ஆகியவை முழுதாய் கல்வெட்டாய் பொறித்துள்ளனர்.
இவ்வாறு இறந்துபட்டவர்களின் குடும்பத்தாருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. நிறைய நிலங்கள் தானமளிக்கப்பட்டுள்ளது இவ்வாறு வழங்கப்படும் நிலம் “உதிரப்பட்டி நிலம்” என அழைக்கப்படும்.
நாட்டிற்காக ஊரிற்காகவோ, அல்லது தன் குடும்பத்திற்காகவோ, பெருவீரம் காட்டி இறப்போரை, மக்கள் மறவாது வணங்கினர். அவ்வாறு இறந்தோர் நினைவாய் கல்லெடுத்து வணங்கும் வழக்கத்தை நம் முன்னோர் போற்றிவந்துள்ளதற்கு பல சான்றுகள் நம்மிடையே உண்டு. தற்காலம் வரையிலுமே தம் குடும்பத்தில் எவரேனும் இறந்தால், அவர் நினைவாய் நீத்தார்கடன் செலுத்தும்போது கல்லை வைத்து, அதனைச்சுற்றி அவர் உடுத்திய உடை, அவருக்கு பிடித்த உணவுப்பொருட்களை படைக்கும் வழக்கம் பெருமளவில் காணப்படுகிறது! அதற்கு “கல்லெடுத்தல்” என்று பெயர்.
தொல்காப்பியர் தனது தொல்காப்பியத்தில் இவ்வகை மரபை ஆறு வகை நிலைகளாய் பிரிக்கிறார்,
“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்- சீர்த்தரு சிறப்பின் பெரும்படை வாழ்தல்”
இந்த ஆறுநிலை கூறுகளும் நடுகல் குறித்து வருபவையே, இதிலுள்ள பெரும்படையும், வாழ்த்தலும் நடுகல் வழிபாட்டை குறிப்பதாகும். இதனடிப்படையிலேயே நடுகற்கள் எழுப்பியுள்ளனர்.முதலில் கல்லெடுக்கும் நிலையில் இருந்து படிப்படியாய் வழிபடும் நிலைக்கு நடுகல் வழிபாடு உயருகிறது.
நடுகல் எடுக்கும் முறை:
தொல்காப்பியம் கூறும் ஆறு கூறுகளை ஆராய்ந்தால், அதில் நடுகல் எடுக்கும் முறைகுறித்து வருவதை உணரலாம்.
பல சங்க இலக்கிய நூல்களும் நடுகல் வழிபாட்டை எடுத்துயியம்புகின்றன.பெருங்கற்கால சின்னங்கள் பலவற்றிலும் இவ்வகை கூறுகள் காணப்படுகிறது! அகநானூற்று பாடலில் ஒன்றில் “உயர்பதுக்கை” என்ற சொல்லைகுறிக்கிறது. பதுக்கையானது உயரமாக இருப்பதனால் இவ்வாறு அழைத்தனர்.
“சிலைஏ றட்ட கணைவீழ் வம்பலர் உயர்பதுக்கை இவர்ந்த ததர்கொடி அதிரல் நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும் கரனிடை விலங்கிய மரன்ஓங்கு இயவின்”
ஆறலைகள்வர் வில்லில் கோர்த்து எய் அம்பினால் வழிப்போக்கர் இறந்துபட்டனர். அவர்தம் உடலை மூடிய உயர்ந்த கற்குவியல்களில் காட்டுமல்லிகை ஏறிப்படரும். அத்தகைய நடுகல்லாகிய தெய்வத்திற்கு நாட்பலியிட்டு வழிபடுவர். இப்பாடல் உயர்ந்தபெரும் பதுக்கையை கூறுகிறது!
மற்றொரு பாடல்
“இருங்கேழ் இரலை சேக்கும் பரல் உயர்பதுக்கை கடுங்கண் மழவர் களவு உழவு”
என கூறுகிறது!.இவ்வுயர்பதுக்கையிடையே மறைந்து அஞ்சாமையுடைய மழநாட்டார் உழவுபோல் களவுசெய்ய இடமாய் அமைந்தது என தெரிவிக்கிறது. சங்க இலக்கியங்கள் கூறும் இத்தகைய சிறப்புமிக்க நடுகல், நெடுங்கல், பெருங்கற்கால சின்னங்கள் போன்றவற்றை செங்கம் மரபுநடையில் கண்டோம்.