Events

சப்தஸ்தானம் இடங்கள்

நந்திதேவர் திருமணம்

திருவையாற்றுக்கு அருகே அந்தணர்புரத்திலே பிறந்தவர் நந்திதேவர். தாயின்வயிற்றில் பிறக்காமல் சுயம்புவாய் தோன்றியவர். சிலாதமுனி இவரது வளர்ப்பு தந்தையாவார். தம் மெய்க்காப்பாளாராகிய நந்திதேவருக்கு மணமுடிக்க ஐயாறப்பர் திருவுள்ளம் கொண்டார். திருமழபாடியில் வாழ்ந்துவந்த வசிட்டமாமுனியின் மகள் சுயம்பிரகாசைக்கு பெண்பார்த்து மணமுடித்து வைக்க முடிவெடுத்தார் ஐயாறப்பர். இத்திருமணம் பங்குணிமாதம் புணர்பூசம் அன்று நடைபெறும். மாப்பிள்ளை நந்தி அழகிய மணகோலத்தில் குதிரைவாகனத்தில் திருமழபாடி வர, அவருடன் பல்லக்கில் ஐயாறப்பரும், இறைவியும் வருவர். மாப்பிள்ளை வரவைநோக்கி வைத்தியநாதரும், சுந்தராம்பிகையும் கண்ணாடிபல்லக்கில் சென்று கொள்ளிடமணலில் காத்திருப்பர்.மாப்பிள்ளை வீட்டார் வந்ததும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
பெண்வீட்டார் பின்னேவர, நந்திதேவரும் ஐயாறப்பரும் ஊர்வலமாய் வருவர். அப்போது உள்ளூர் மக்கள் தத்தம் வீடுகளில் மோர், பானகம், உணவு அளித்து விருந்தோம்புவர். அன்றுமாலை ஆறு மணியளவில் நந்திதேவர்-சுயம்பிரகாசை திருமணம் நடைபெறும்.இக்காட்சியை காணும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இவ்விழாவை காண திருச்சி, தஞ்சை பகுதி மட்டுமின்றி தமிழகமெங்குமிருந்து ஆயிரகணக்கில் மக்கள் கூடி ஊர்வலமாய் நடந்தே ஏழு கோவிலையும் சுற்றி வருவது கண்கொள்ளா காட்சியாகும்

ஏழூர் பல்லக்கு திருவிழா

இது சித்திரைமாதத்தில் நிகழும் ஒரு பெருவிழா. இதைப் பிரமோற்சவம் என்றும் வழங்குவர். இதில் ஐந்தாம் நாள் விழா தன்னைத்தான் பூசிப்பதாகும். இவ்விழாவின் முடிவில் ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியாருடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிப்பல்லக்கிலும், நந்திதேவர் தனியொரு வெட்டிவேர்ப் பல்லக்கிலும் எழுந்தருளித் திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் எனும் தலங்களுக்கு எழுந்தருள, திருக்கண்டியூரார் நகைகள் வழங்க, திருப்பழனத்தினர் பழங்கள் வழங்க, திருப்பூந்துருத்தியினர் பூக்கள் வழங்க, திருச்சோற்றுத்துறையினர் சோறு வழங்க, திருநெய்தானத்தினர் நெய் வழங்க, திருவேதிக்குடியிலிருந்து வேதியர் வர அந்தந்த ஊர்களின் இறைவரும் தனித்தனி வெட்டிவேர்ப்பல்லக்குகளில் எதிர்கொண்டு அழைத்து உடன்தொடர மறுநாட்காலை ஐயாற்றுக்கு எழுந்தருளுவார். இதை ஏழூர் விழா அல்லது சப்தஸ்தானத் திருவிழா என்பர்.
அதன் தொடர்பான விழாவே சப்தஸ்தான விழாவாகும். திருமழப்பாடியில் நந்திதேவருக்கு நடைபெறும் திருமணத்தை நடத்திவைக்க ஐயாறப்பன் கிளம்பும் நந்திதேவர் திருமண விழாவும் சித்திரைத் திருவிழாவும் இவ்வூரின் பெருவிழாகள். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் திருவையாற்றில் ’சப்தஸ்தானம்’ திருவிழா கொண்டாடப்படுகிறது. இது நந்தி தேவருடைய திருமண ஊர்வலமாக கருதப்படுகின்றது. திருவையாறு மற்றும் அதன் அருகிலுள்ள ஏழு கோயில்களிலிருந்து கண்ணாடிப் பல்லாக்குகளில் அந்தந்தக் கோயில் கடவுளர்கள் இக் கோயிலில் சங்கமிக்கின்றனர். அங்கு ’பூச்சொரிதல்’ நடைபெறும். விழாவின் இறுதியில் பல்லக்குகள் மீண்டும் அந்தந்த கோயில்களுக்குத் திரும்பிச் செல்கின்றன. தென்னாட்டில் இதைப் போன்றதொரு விழாவைக் காணமுடியாது. இவ்விழாவில் பல லட்சக்கணக்கான மக்கள் குழுமி ஏழு ஊர்களையும் சுற்றிவரும் காட்சி அற்புதமானதொன்றாகும்.
சப்தஸ்தானம் என்பது ஏழு இடங்கள் என்று பொருள்படும். ஏழு ஊர்களைக் குறிக்கவும் அச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தானம் எனப்படும் ஏழு இடங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.

“திருவின் மாமரம்  ஆர் பழனம்பதி
அயிலு சோறவை ஆளு துறைப்பதி
திசையினாள் மறை தேடிய முற்பதி
சிரமுமா நிலம் வீழ்தரு மெய்ப்பதி
பதுமநாயகன் வாழ்பதி நெய்ப்பதி
திருவையாறுடன் ஏழு திருப்பதி பெருமானே “

தமிழகத்தில் நடைபெறும் சப்தஸ்தானத் திருவிழாக்களில் முக்கியமானது திருவையாறு சப்தஸ்தானம் ஆகும். திருவையாறு ஐயாறப்பர் கோயிலிலிருந்து அலங்கரிக்கப்பட்டப் பல்லக்கில் இறைவனும், இறைவியும் உலாக் கிளம்பி, தொடர்புடைய கீழ்க்கண்ட ஆறு தலங்களுக்கும் சென்றுவிட்டு இறுதியாக திருவையாற்றுக்குத் திரும்புவர்.