திருப்பழனம்

பெரியநாயகி சமேத
ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்

திருவையாறு-கும்பகோணம் சாலையில் 4 கி.மீ தொலைவில் உள்ளது திருப்பழனம். கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. ஏழூர் கோவில் திருவிழாவில் இரண்டாவதாய் பல்லக்கு வரும் ஊர் இது. வாகீச பெருமானால் 5 பதிகமும், திருஞானசம்பந்தரால் ஒரு பதிகமும் பாடல்பெற்ற இந்தத் திருத்தலம் ஆறாம் நூற்றாண்டிற்கும் முந்தைய பழமையானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
“பழனத்து மேவிய முக்கண் பரமேட்டி யார்பயில் கோயில் உழை புக்கு, இறைஞ்சி, நின்று ஏத்தி, உருகிய சிந்தையர் ஆகி, விழைசொல் பதிகம் விளம்பி, விருப்புடன் மேவி அகல்வார், அழல் நக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார்” என இவ்வூர் இறைவனை சம்பந்தர் புகழ்கிறார்.
மேலும் அவர்களின் பதிகங்களில் காணப்படும் இயற்கை வர்ணிப்பு கொண்டு இந்த இடம் இவ்வாறு இருந்திருக்க வேண்டும் என்பதையும் ஊகிக்க முடிகிறது.
கட்டடக் கலைக்கு உதாரணமாகத் திகழும் முழு கற்றளியாக இந்தக்கோவில் சோழ மகா சாம்ராஜ்யத்தின் ஆணிவேராக விளங்கிய ஆதித்தசோழர் (871-907) காலத்தில் கற்றளியாக கட்டடப்பட்டது.

கோவில் அமைப்பு:

இந்தத் திருக்கோவில் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபத்தை கொண்டது, முகப்பு மண்டபம்,விழா மண்டபம் சுற்றுச் சுவர்கள், பதினாறுகால் மண்டபம், மடப்பள்ளி அருகில் இருக்கும் அம்மன் கோவில் ஆகியவை பிற்காலத்தில் வெவ்வேறு அரசர்களால் வெவ்வேறு அரசுகளால் கட்டப்பட்டன …. அவை ஒருபுறமிருக்க ,சோழ வேந்தன் எடுப்பித்த சுற்றில், மகா மண்டபத்தில் இருந்து வெளியேறுவதற்கு இரண்டு புறமும் அந்தாராளவழி உள்ளது, நாகர அமைப்பைச் சேர்ந்த இந்தத் திருக்கோவில் , கோவில் கட்டடக் கலைக்கு ஒரு முன்னுதாரணமாக கருதலாம். உபபீடம் , தாங்குதளம் பாதச்சுவர் , பிரஸ்தரம், ஹாரா, அடுத்த தளம் , கழுத்து , கிரீவம் தூபி என அனைத்து பாகங்களையும் கொண்டும், ஒவ்வொரு பாகமும் தனிச் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது இந்த கோவில் விமானம்.
வழக்கமாக கோயில்களில் இருப்பது போல அல்லாமல் கோஷ்டத்தில் சப்தரிஷிகளுடன் தென்முக தெய்வம் தக்ஷிணாமூர்த்தி முதலிலேயே காணப்படுகின்றார் அடுத்த விநாயகரும், வடக்குப் புறத்தில் விஷ்ணு துர்க்கையும் காணப்படுகின்றனர்… அதுமட்டுமல்லாமல் சிவனின் பல்வேறு ரூபங்கள் கோஷ்டத்தில் மிக நுட்பமான வடிவில் புடைப்புச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் தூண்களும் அழகிய நுணுக்கங்களுடன் ஒரே மாதிரி அல்லாமல் வெவ்வேறு மாதிரி அமைப்பை பெற்றுள்ளது மேலும் ஒரு சிறப்பு. அவைகளில் காணப்படும் மாலை தொங்கலும் மேலும் வசீகரிக்கிறது….
அதிட்டானத்தில் இருந்து பிரஸ்தரம் வரை , பல வரலாற்றுச் செய்திகளை கல்வெட்டுகள் மூலம் நமக்கு எடுத்துரைப்பதுடன் பிரகாரத்தில் அமைந்துள்ள கூடுகளில் பல்வேறு அழகிய குறிஞ்சிற்ப்பங்கள் நம்மை வியக்க வைக்கின்றது….. பெரும்பாலான கோவில்களில் பார்க்கமுடியாத , நின்ற நிலையில் பல்வேறு இசைக் கருவிகளை கையிலேந்தி உள்ள அப்ஸரஸ்களையும், விருத்தஸ்புடிதம் எனும் தூண் போன்ற அமைப்பையும் இந்தக் கோவில் விமானத்தில் பிரஸ்தரத்திற்கு மேல் உள்ள தளத்தில் காணலாம்….
மேலும் கிரீவ கோஷ்ட பகுதியில் சிவனின் பல்வேறு ரூபங்கள் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளன. தெற்கு புறத்தில் வசிகரிக்கும் விநாயகரும் மேற்கு புறத்தில் அர்த்தநாரீஸ்வரர் கிழக்கு புறத்தில் ஆலிங்கன மூர்த்தி மிகவும் கவரும் விதத்தில் அமைந்துள்ளது கழுத்துப் பகுதியில் சிறப்பு…. எட்டு திசைகளிலும் தலை வாகனமான ரிஷபம் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டு மேலும் கழுத்திற்கு ஆபரணமாக அழகு சேர்க்கின்றது…. இன்னும் ஒரு நூறு கதைகள் பேசலாம் இந்த திருக்கோவிலின் சிற்பங்களையும், கட்டிடக் கலைகளைப் பற்றியும்.

கல்வெட்டு சிறப்புகள்:

முதலாம் ஆதித்த சோழர் காலத்தில் பல்வேறு நிவந்தங்களை இந்தத் திருக்கோவில் பெற்றிருக்கின்றது என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம், இவரது 17 ஆவது ஆட்சியாண்டில் சோழ பெருமானடிகள் தேவியார் தென்னவன் மாதேவியார் என்பவர் நொந்தா விளக்கு எரிப்பதற்கு நிவந்தம் அளித்துள்ளார், இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் ஆதித்த சோழன் சோழர் “பெருமானடிகள் பெருநற்கிள்ளி சோழன்” என்றும் , “உலக பெருமான்” என்றும் பெயர்களில் அழைக்கப்பட்டார் என்பது அறிய முடிகிறது.
மதுரை கொண்ட கோப்பரகேசரி (907 -955) மூன்றாவது ஆட்சியாண்டில் “சோழ பெருமானடிகள் பரகேசரி பற்மர் தேவியர் சோழமாதேவியார் தாயார் முள்ளூர் நங்கையார் ” என்பவர் 30 கழஞ்சு பொன் நொந்தா விளக்கு எரிப்பதற்கு நிவந்தம் அளித்துள்ளார். மேலும் நில தானமும் சாவா மூவாப் பேராடு மற்றும் பொன் தானமும் இந்தத் திருக்கோயிலுக்கு அளித்துள்ளனர்..
இவரது 31 ஆவது ஆட்சியாண்டில், கோவிலின் பல்வேறு பணிகளுக்காக ஒரு பெரிய நிலத்தை பகிர்ந்து , அந்தந்த பகுதியில் இருந்து வரும் வருமானம் , அந்தந்த பணிகளுக்காக பிரித்து அளிக்கப்பட்டுள்ளது இந்த நிலத்தை பற்றி குறிப்பிடும் போது , “கரிகால கரைக்கு வடக்கே” என்று நிலத்தின் எல்லையை குறிப்பிடுகின்றனர் அதாவது காவிரி கரைக்கு “கரிகால கரை” என்னும் பெயர் பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பதை இங்குள்ள கல்வெட்டின் மூலம் அறியலாம். பராந்தகன் காலத்தில் பழுவேட்டரையரின் இளவரசி ஒருவர் சந்திரன் சூரியன் உள்ளவரை நொந்தா விளக்கு எரிப்பதற்கு ஆடுகள் தானமாக அளித்துள்ளார்
கோப்பரகேசரி வர்மன்(973 – 985) ஆட்சியாண்டில் அருமொழிதேவர் தெரிஞ்ச கைக்கோளப்படை சார்ந்த ஒருவர் இந்த திருக்கோவிலுக்கு தானம் அளித்துள்ளார்…. கைக்கோள படையைச் சேர்ந்த ஒருவர் நிவந்தம் அளிக்கும் அளவிற்கு வசதியுடன் வாழ்ந்து இருக்கிறார் என்பதையும் , அருமொழிதேவர் பெயரில் கைக்கோளப்படை கொண்டிருந்தது என்பதையும் அறியமுடிகிறது…
கோ ராஜராஜ கேசரி(985 – 1014) வருமர்க்கு ஒன்பதாம் ஆட்சியாண்டு 147 ஆம் நாள் கூற்று ஆழ்வாருக்கு மணி கூத்தன் என்பவன் தொண்ணூத்தி மூன்று கழஞ்சு பொன் தானமாக அளித்துள்ளார்
ராஜகேசரி வர்மனின் கேரள போரின் வெற்றி சின்னமாக, அவரிடமிருந்து அனுமதி பெற்று “கம்பன் மணியரான விக்கிரமசிங்க மூவேந்த வேளார்” என்பவர் ஒரு மரகத தேவர் சிலையை இந்த கோவிலில் நிர்மாணித்தார் என்றும் கல்வெட்டு மூலம் அறியலாம்… அது என்ன மூர்தத்தின் சிலை என்பது விபரம் இல்லை. இந்தக் கோவிலின் அருகில் திருக்காமக் கோட்டம் உடைய பெரிய நாச்சியார் எனும் பெயருடைய அம்மனுக்கு என்று தனி சன்னதி மூன்றாம் குலோத்துங்க சோழர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது (1178 – 1216)