திருவையாறு

அறம்வளர்த்தநாயகியம்மை சமேத
செம்பொன்சோதீசுரர்

தஞ்சைக்கு வடமேற்கே பன்னிரண்டு கி.மீ தொலைவில் உள்ளது திருவையாறு. வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி எனும் ஐந்து ஆறுகளை உடைய ஊர் என்பதால் இவ்வூர் “திருவையாறு” என அழகுதமிழிலில் அழைக்கப்படுகிறது.

ஊர்சிறப்பு:

இவ்வூரின் பெயராலேயே இறைவனும் அழைக்கப்படுகிறார். “ஐயாறன்” “ஐயாறப்பன்” என்று தமிழில் அழைக்கப்படும் இத்தல இறைவன், வடமொழியில் “பஞ்சநதீஸ்வரர்” என வழங்கப்படுகிறார். இத்தலத்தினை காசியோடு ஒப்பீட்டு கூறுவர், எனவே காசியை போலவே இறந்தவர்களது எரியூட்டிய சாம்பல்களை கரைக்க இங்குள்ள காவிரிக்கரையில் சடங்குகள் அனுதினமும் நடைபெற்றுவருவது நோக்கத்தக்கது. திருவையாறு-கும்பகோணம் சாலையில் தியாகராசர் சமாதி உள்ளது. இச்சமாதி கோவிலுக்குள்ளே அவரது கீர்த்தனைகள் தமிழிலும், தெலுங்கிலும் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. அவர்வசித்த இல்லம் திருவையாற்று திருமஞ்சன வீதியில் இன்றும் உள்ளது. அந்த இல்லம் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாய் உள்ளது. மராத்தியர் கால பழங்கால கட்டடங்கள் இன்றும் இவ்வூரைச்சுற்றி பல உள்ளன. பதினைந்து மண்டபத் தெருவிலுள்ள மண்டபங்கள் வேதம்ஓதும் பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டவை, அவை இன்றும் காவிரியை நோக்கியவாறு ஒரே வரிசையில் அமைந்துள்ளது!

திருவையாற்று கோவில்அமைப்பு:

இக்கோவில் முதலாம் ஆதித்தன் கால கற்றளி என ஆய்வாளர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கருதுகிறார். ஏழு நிலைகளையுடைய ராஜகோபுரமும், நான்கு பிரகாரங்களும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும், கருவறையின் முன்பாக அந்தராளத்தில் போகசக்தி அம்மனும், ஸ்தபன மண்டபத்தில் நந்தி, பலிபீடமும் அமைந்துள்ளது. முதற்சுற்றில் சப்தமாதர், அறுபத்துமூவர் உள்ளது.இச்சுற்றின் விதானத்தில் ஓவியங்கள் காணப்படுகிறது. கருவறையின் தென்புறத்தில் தெட்சினாமூர்த்தியும், உமாசகேதர், முருகனும், கருவறை தேவகோட்டத்தில் மாதொருபாகரும் காட்சியளிக்கின்றனர்.
இரண்டாம் திருச்சுற்றில் சோமாஸ்கந்தர், முக்தி மண்டபம் உள்ளது. இதில் ஆதிவிநாயகர், நவகிரக திருமேனி சிலைகள் உள்ளது.இக்கோவிலின் தலவிருட்சமான வில்வமரம் இங்குதான் உள்ளது. மூன்றாம் திருச்சுற்றில் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்துடன் சித்திவிநாயகர் அருள்பாளிக்கிறார். இப்பகுதியில் திருமுறைகண்ட நால்வருக்கும் சிற்றாலயங்கள் உள்ளது. நான்காம் திருச்சுற்றில் கோபுரவாயிலின் இருபுறம் துவாரபாலகர்களும், வலப்புறம் தண்டபாணியும், இடப்புறம் இரட்டைவிநாயகரும் உள்ளனர். தென்கிழக்கு மூலையில் “திருக்குளம்” உள்ளது. இத்திருக்குளம் சூரியன் தோற்றுவித்ததாய் நம்பப்படுவதால் இதற்கு “சூரியபுட்கரணி” என பெயர். குளத்தின்நடுவே சிறிய நீராழி மண்டபம் உள்ளது. நான்காம் திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் தென்கைலாயமும், வடபகுதியில் வடகைலாயமும் காணப்படுகிறது.

ஐயாறப்பர் கருவறை :

முற்கால சோழர் கோவில் விமான அமைப்பிற்கேற்ப இங்கும் அதிட்டானம், சுவர், கிரீவம், சிகரம், ஸ்தூபி முதலான உறுப்புகளை கொண்டு விளங்குகிறது. அதிட்டானபகுதியில் பத்மபீடமும், குமுதவரியும், அக்ரபட்டிபகுதியில் சிங்கத்தலை வடிவம் உள்ளது. மேலும் அரைத்தூண்களுடன் தேவகோட்டங்கள் உள்ளது. தேவகோட்டத்தில் தட்சினாமூர்த்தியும், திருமாலும்,நான்முகனும் உள்ளனர்.பிரஸ்தரம் எனும் கூரைபகுதியில் உத்ரம், ஏராதகம், கபோதம், யாளம் முதலிய உறுப்புகளுடன் உள்ளது.கபோத பகுதியில் கூடுகளும், ஏராதகத்தில் பூதவடிவங்களும் உள்ளது. கிரீவம் எனும் கழுத்துப்பகுதியில் சிற்பங்கள் உள்ளன. விமானத்தின் சிகரப்பகுதி வேசரம் எனும் வட்டவடிவில் உள்ளது.இவ்விமானம் ஏகதள விமான வகையை சேர்ந்தது.
இறைவன்: செம்பொன்சோதீசுரர் எனவும் இறைவி: அறம்வளர்த்தநாயகியம்மை என்றும் தற்போதைய வழக்கில் அழைக்கப்படுகின்றனர்.

தென்கைலாய கருவறை:

ஐயாறப்பர் கருவறையை போன்றேஇக்கோவிலும் கருவறை, அந்தராளம், முன்மண்டபம் கொண்டுள்ளது.இக்கோவிலின் திருச்சுற்று மதிலை ஒட்டி சில தூண்கள் உள்ளது. இத்தூண்கள் நுளம்பர் எனும் சிற்றரச மரபினர் கலையினை ஒத்து காணப்படுகிறது. இவை ராஜராஜர் கால நுளம்ப படையெடுப்பின் வெற்றிசின்னமாய் கருதப்படுகிறது, இது வடதிசைநோக்கியமைந்த ஓர் கற்றளி. இது ஏகதளவிமான, வேசர வகையை சேர்ந்த கற்றளி. கிரீவப்பகுதியில் சிற்பங்கள் உள்ளது. கருவறை விமானம் உபபீடம், அதிட்டானத்துடன் திகழ்கிறது. பிறசோழர்கால கோவில்களை போன்றே இதிலும் உபானம், பத்மம் குமுதம், காந்தம், அக்ரபட்டியல் முதலிய உறுப்புகள் கொண்டு விளங்குகிறது. இக்கோவிலுக்கு “பஞ்சவன் மாதேவீச்வரம்” என்ற பெயரும் உண்டு.

வடகைலாய கருவறை:

நான்காம் திருச்சுற்றில் வடபகுதியில் அமைந்த இக்கோவிலுக்கு, “உலகமாதேவிச்வரம்”,”உத்ரகைலாயம்” என்ற பெயருண்டு. மாமன்னர் ராஜராஜசோழனின் பட்டத்தரசி தந்திசக்திவிடங்கி எனும் உலகமாதேவி இக்கோவிலை எழுப்பியுள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. இக்கோவிலே இன்று வடகைலாயம் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலும் கருவறை, அந்தராளம், ஸ்தபனமண்டபம், முகமண்டபம் கொண்டு விளங்குகிறது. அந்தராள மண்டத்திலுள்ள நான்கு தூண்களும் எழிலார்ந்தவை.இத்தூண்கள் சதுரம், எண்பட்டை, கலசம், குடம், பலகை, பத்மம், போதிகை என்ற தூணுக்குரிய உறுப்புகளை கொண்டு அழகுற வடிக்கப்பட்டுள்ளது. கிரீவகோட்டத்தில் விமான தேவதைகள் உள்ளது. இதுவும் ஏகதள விமான, வேசர சிகர அமைப்பில் அமைந்த ஓர் கற்றளியாகும்.

திருவையாற்று பதிகம்:

திருவையாறு பதிகம் திருநாவுக்கரசரால் கயிலைக் காட்சியினை திருவையாற்றில் பார்த்தபோது பாடப்பெற்றது. நாவுக்கரசர் பன்னிரு பதிகங்களும், சம்பந்தர் ஐந்தும், சுந்தரர் ஒன்றும் என இங்கு பதிகம் பாடியுள்ளனர். மாணிக்கவாசகரும் இங்கு பாடல் இயற்றியுள்ளார். திருவையாறு பதிகம் பன்னிரு திருமுறையில் நான்காம் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர வள்ளலார், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் ஐயாறப்பரை சிறப்பித்து பாடல்கள் இயற்றியுள்ளனர்.

கல்வெட்டு செய்திகள்:

இத்தலத்தில் முதலாம் பராந்தகர், இராஜராஜர், இராஜேந்திரசோழர், உத்தமசோழர், சுந்தரபாண்டியர், தேவராயமகாராயர், சதாசிவராயர் போன்றோர் கல்வெட்டுகள் காணப்படுகிறது
முதல்பராந்தகரது பதினான்காம் ஆட்சியாண்டில் தினசரி விளக்கெரிக்க திரிபுவனமாதேவியார் முப்பது கழஞ்சு பொன்தானமளித்துள்ளார். மேலும் வளவன் மாதேவியார் நெய்விளக்கு தினமும் எரிக்க முப்பது கழஞ்சு பொன்னும், நிலம் ஏழு மாவும், வெள்ளிவிளக்கும் அளித்துள்ளார். *ராஜேந்திரசோழரின் மனைவியான உலகமாதேவி பொற்ப்பூ 164 கொடுத்துள்ளார், அதன் எடை 193 கழஞ்சு ஆகும். பொன்னின் எடையை நிறுத்த அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது கழற்சிக்காய், கல்வெட்டில் அடிக்கடி “கழஞ்சு” எனும் சொல் நம் தமிழ் கல்வெட்டில் பயன்படுத்தப்படும், கணக்கதிகாரம் எனும் நூல் கழஞ்சு என்பதின் எடைக்கு தரவுகளை தரவுகிறது.
(உற்றதனி நெல்லொரு மாவாம் மாநான்கு பெற்றதொரு குன்றியது பின்னான்கு மூன்று பனைவெடையா மென்பர்வாய் பத்தான கழஞ்சின் அனிமலரின் கோதாய் அருள்)
ஒரு கழஞ்சு பொன் என்பது இன்றைய ஆங்கில கணக்குப்படி 5.5 கிராம் நிறை கொண்டது. இவ்வாறு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கணக்கீட்டு முறை பயன்பாட்டில் இருந்தது. ஆனால் இன்று உலகம் முழுவதும் ஒரே விதமான கணக்கீட்டிற்கு மாறிவிட்டது.
இராஜகேசரியின் கல்வெட்டில் வாதாபி அரையன் என்பவரின் மணவாட்டி பைதாங்கி வாளுவ நாகணி என்பவர் சிவபுரி நகரத்தாருக்கு 25 கழஞ்சு பொன் அளித்துள்ளார். சோழப்பெருமானடிகள் தேவியார் அழிசி காட்டடிகள் உரிநெய்யால் விளக்கெரிக்க பத்துமாநிலம் தானமளித்துள்ளார்.
முதலாம் ஆதித்தசோழனின் மகனான. கன்னரதேவரின் தாதியான கடம்பவிடரி இறைவனுக்கு உழக்கே ஒருபடி அரைநெய்யால் விளக்கெரிக்க கொடுத்தபொன் இருபது கழஞ்சாகும்.
பாண்டிய வேந்தனான சுந்தரபாண்டியதேவரும் நிறையநிலத்தானம் அளித்துள்ளார். இக்கோவில் தருமபுர ஆதினத்தால் நிருவகிப்பட்டு வரப்படுகிறது.